ரேஷன் கார்டு இருந்தால் கடன் வழங்கப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த நிலையில் மதுரையில் நேற்று (மே 30) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்குக் கடன் அளிப்பது எளிமையாக்கப்படும். விவசாயிகள், வியாபாரிகள் நகைக்கடனாக கிராமுக்கு ரூ.3,000 பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். சிறு, குறு வியாபாரிகள் பயனடையும் வகையில் தனி நபர் கடனாக 50,000 ரூபாய் வழங்கப்படும்.
ரேஷன் கார்டை மட்டும் காண்பித்து இந்தக் கடனை பெற்றுக்கொள்ளலாம். 350 நாட்களுக்குள் இந்தக் கடனை திரும்பச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் கடனை செலுத்தினால் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
No comments:
Write comments