தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, February 16, 2017

TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!

 



தமிழ்நாடு அரௌப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் புவியியல் பகுதியை பொறுத்தவரை, 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த வகையில் தேர்வர்கள் இங்குத் தரப்படும் குறிப்புகளை முழுமையாகப் படித்தாலே போதுமானது.

இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க விரும்பும் மாணவர்கள் பாடப்புத்தகத்தில் கட்டம் கட்டி தரப்பட்டுள்ள பகுதிகளைப் படித்துக் கொள்ளலாம். கடந்த இதழில் அளவற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்ட பூமிப்பந்து பற்றிப் பார்த்திருந்தோம் அதன் தொடர்ச்சியாகச் சில தகவல்களை இப்போது பார்ப்போம்.

கண்முன் தெரியும் பூமியின் பரப்பை, ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் தாளில் அல்லது துணியில் வரைவதே பூலோக வரைபடம் ஆகும். இந்த வரைபடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1)கருத்து சார் வரைபடங்கள் (இந்தியாவின் காலநிலை மேப்)
2)இயற்கை வரைபடங்கள் (நதிகள், கடல்கள், மலைகள் முதலியன அடங்கிய வரைபடம்)
3)அரசியல் வரைபடம் ( நாடுகளின் எல்லை களையும், தலைநகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளையும் குறிக்கும் வரைபடம்)வரைபடத்தில் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்திற்கும், பூமியின் மீது அதே இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் அளவை எனப்படும்.

வரைபடத்தினைப் பற்றி ஒரு தேர்வில் கீழ்க்கண்டவாறு ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
‘சென்னையில் இருந்து, திருப்பதி செல்லும் ஒருவருக்குக் கீழ்க்கண்ட எந்த வரைபடம் பயன்படும்?’

அ) அரசியல் வரைபடம்           
ஆ) இயற்கை வரைபடம்
இ) கருத்துசார் வரைபடம்   
ஈ) எதுவுமில்லை

இந்த வினாவிற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? உண்மையில் அந்தப் பயணிக்குப் பயன்படும் வரைபடம் அரசியல் வரைபடம் ஆகும். நிலநடுக்க அலைகள்: பூமியில் ஏற்படும் நிலநடுக்க அலைகள் பூகம்பத்தை உண்டுபண்ணுகின்றன. இந்த நிலநடுக்க அலைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை உட்புற அலைகள், மேற்புற அலைகள்.

உட்புற அலைகளை மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.                    
அவை: 1) P அலைகள் (Primary Waves),2) S அலைகள் (Secondary Waves)
‘P’அலைகள் நொடிக்கு ’8’ கி.மீ. வேகத்தில் செல்வன. திட, திரவ, வாயுப்பொருட்களை ஊடுருவும்.‘S’அலைகள் நொடிக்கு ‘5’ கி.மீ. வேகத்தில் செல்வன. திடப்பொருட்களை மட்டுமே ஊடுருவும்.

பூமிக்கு மேலே, உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் ‘L’அலைகள் நொடிக்கு நான்கு கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. இந்த ‘L’  அலைகள் தான் (மேற்புற அலைகள்) நிலநடுக்க மானியில் இறுதியாகப் பதிவாகின்றன.இதுவரை பூமியைப்பற்றி சில அரிய தகவல்களைப் பார்த்தோம். இனி எரிமலைகளைப்பற்றிக் காண்போம். எரிமலைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை செயல்படும் எரிமலை, தணிந்த எரிமலை, உயிரற்ற எரிமலை.

செயல்படும் எரிமலை என்பது, அவ்வப்போது சீராக லாவா குழம்பை வெளியேற்றும். உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை ஹவாய் தீவில் உள்ள மோனோலோவா ஆகும். இந்தியாவிலும் ஒரு செயல்படும் எரிமலை உள்ளது. அது, அந்தமான் தீவில் உள்ள பாரான் தீவுதான்.

தணிந்த எரிமலை என்பது முன்பு லாவா குழம்பை உமிழ்ந்தவை. தற்போது உமிழவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் லாவா குழம்பை உமிழ வாய்ப்புள்ளவை. இந்த எரிமலைகள் மிகவும் ஆபத்தானவை. இவற்றிற்கு உறங்கும் எரிமலைகள் என்ற பெயரும் உண்டு.

இத்தாலியில் உள்ள வேரூவியஸ், ஹவாய் தீவில் உள்ள ‘மௌனகியா’ஆகியவை இந்த உறங்கும் எரிமலைக்கு எடுத்துக்காட்டுகள்.மூன்றாவது வகையான உயிரற்ற எரிமலைகள் என்பவை. ஏற்கனவே எரிமலைக் குழம்பை உமிழ்ந்தன.

தற்போது அவ்வாறு உமிழ்வதில்லை. எதிர்காலத்தில் உமிழ வாய்ப்பு இல்லை. எனவே, இவை இறந்த எரிமலைகள் எனப்படுகின்றன. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ, இந்தியாவில் உள்ள நார்கண்டம் (அந்தமான் தீவு), திருவண்ணாமலை ( தமிழ்நாடு), பனாகா (ஆந்திரா) ஆகியவை இந்த உயிரற்ற எரிமலைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

புவியியலில் அடுத்து முக்கியமான பகுதி வானிலைச் சிதைவுகள். இந்தப் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் ஒரு வினா கேட்கப்படும். எனவே, இதையும் கவனத்தில் கொள்ளவும். வானிலைச் சிதைவுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அவை பௌதீகச் சிதைவுகள், ரசாயனச் சிதைவு, உயிரினச் சிதைவு.பௌதீகச் சிதைவுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: வெப்ப அழுத்தச் சிதைவு, உறைபனி சிதைவு, உப்புப் படிகமாதல் ஆகியவை.ரசாயனச் சிதைவுக்குச் சில எடுத்துக்’காட்டுகள்: கரைதல், தாதுநீர் கொள்ளல், நீரின் சேர்க்கை, ஆக்ஸிகரணம் ஆகியவை.

உயிரினச் சிதைவுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: தாவரங்கள், மரங்கள் வளர்வதால் நிலச்சரிவு ஏற்படுதலும், விலங்குகளில் மேய்ச்சலால் ஏற்படும் மண் அரிமானமும் ஆகும்.வானிலைச் சிதைவுகளில் ஆற்றின்போக்கு தொடர்பான நிலத்தோற்றங்கள்: ஒரு நதியானது தான் உற்பத்தியாகும் நிலையில் தொடங்கி, கடலில் சென்று கலக்கும் வரை 9 விதமான நிலத் தோற்றங்களைத் தன் பாதையில் ஏற்படுத்துகிறது. இந்த ஒன்பது விதமான நிலத்தோற்றங்களைப் பற்றியும் வேறு சில அற்புததகவல்களையும் அடுத்த இதழில் காண்போம்.

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

No comments:
Write comments